தமிழக அரசியலின் மூத்த தலைவர் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவராக வலம் வந்த நல்லகண்ணு, கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டதால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். மேலும் அவருக்கு வயது மூப்பு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது. நுரையீரலில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து அவரை தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில்,  சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இன்று மருத்துவமனையில் உள்ள நல்லகண்ணுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், Dr. சாந்தாராம் தலைமையிலான மருத்துவ குழு முறையான சிகிச்சையை வழங்கி, நுரையீரல் அடைப்பை நீக்கியுள்ளதாகவும், நாளை CT ஸ்கேன் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதால், அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மத்தியில் கவலை நிலவி வருகிறது.