சென்னை எண்ணூரில் பெல் நிறுவனம் மேற்கொண்டுவரும் அனல் மின் நிலைய கட்டுமான பணியின் போது ஏற்பட்ட பயங்கர விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கட்டிட முகப்புப் பகுதி திடீரென சரிந்து விழுந்ததால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் நேர்ந்த போது 30க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், உயிரிழந்த 9 தொழிலாளர்களும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், இந்த விபத்து குறித்து கேட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் மிகுந்த வருத்தம் தெரிவித்ததோடு, தலா ரூ.10 லட்சம் நிதியுதவியையும், உடல்களை அவர்களது சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க தேவையான நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் கட்டுமான தர நிலைகள் மீறப்பட்டதா என்ற கோணத்திலும் பரிசீலனை செய்யப்படுவதாகவும் அரசு வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
