தமிழகத்தில் சாதி அடிப்படையிலான ஆணவக் கொலைகளை முற்றுப்பெற முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டசபையில் உரையாற்றிய அவர், இந்த ஆணையம் சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு தனிச்சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதி தெரிவித்தார். சாதி அடிப்படையிலான கொடூரச் சம்பவங்களை தடுக்கும் வகையில் இது ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

இத்தகைய சாதி ஆணவக் கொலைகளை தடுக்க, தமிழகத்தில் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், பல்வேறு சமூக இயக்கங்கள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னணியில் தற்போது அரசு அறிவித்துள்ள இந்த விசாரணை ஆணையம், சாதி அடிப்படையிலான வன்முறைகளை முற்றிலுமாக ஒழிக்க வழிகாட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.