நேபாள நாட்டின் வடக்குப் பகுதியில், திபெத் எல்லைக்கு மிக அருகில் இமயமலையில் ஏற்பட்ட திடீர் பனிப்பாறை சரிவு காரணமாக ஆற்றில் கொடூர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேபாள அரசின் தகவல்படி, இமயமலையில் உடைந்த பனிப்பாறை லெண்டே ஆற்றில் விழுந்ததால் இந்த வெள்ளம் உருவானது. இதுவரையில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி 32 போலீசார் மற்றும் ஆயுதப்படையைச் சேர்ந்த 8 பேர் என மொத்தம் 40 பாதுகாப்புப் படையினரும், ஏராளமான பொதுமக்களும் காணாமல் போயுள்ளனர். இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கிராமங்களுக்குள் புகுந்த வெள்ள நீரால் ஏராளமான வீடுகள் அடியோடு அடித்துச் செல்லப்பட்டன. சாலைகள் மற்றும் பாலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளான சியாப்ரு மற்றும் திமுரே ஆகிய இடங்களில் வானிலை மோசமாக உள்ளதால் மீட்பு ஹெலிகாப்டர்கள் தரையிறங்க முடியாத நிலை நீடிக்கிறது. இதனால் மீட்புப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் மற்றும் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பிரதமர் பாலேந்திர ஷா அறிவுறுத்தியுள்ளார். திபெத்தின் கியிரோங் பகுதியிலும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
#WATCH | நேபாள வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடு மற்றும் கார் – வெளியான அதிர்ச்சிக் காட்சி#SunNews | #NepalFlood pic.twitter.com/naK21abwRY
— Sun News (@sunnewstamil) August 26, 2026
இந்த திடீர் வெள்ளத்தால் 105 இந்தியர்கள் உட்பட 384 வெளிநாட்டினர் மாயமாகி உள்ளனர். மலேஷியாவை சேர்ந்த 17 பேர், பிரிட்டனைச் சேர்ந்த 12 பேர், தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த 4 பேர், அமெரிக்காவைச் சேர்ந்த 3 பேர், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்தைச் சேர்ந்த தலா ஒருவர் மாயமாகி உள்ளனர். எஞ்சியவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது இன்னும் தெரியவில்லை. கைலாஷ் யாத்திரை சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 57 பேர் பெருவெள்ளத்தில் சிக்கினர். அவர்களில் ஒரு பஸ்சில் பயணித்த 22 பேர் மட்டும் இதுவரையில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
#WATCH | பெரு வெள்ளக் காட்சிகளை பகிர்ந்த நேபாள் போலீஸ்!#SunNews | #NepalFlood | #NepalPolice pic.twitter.com/9Tp1UjpIxa
— Sun News (@sunnewstamil) August 26, 2026
மாயமான மற்றவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், சிக்கியுள்ள இந்தியர்கள் நாளை விமானம் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தூதரக அதிகாரிகள் நேபாள அரசிடம் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
மேலும் இந்த வெள்ளத்தில் 19 பாலங்கள் அடித்து சொல்லப்பட்டுள்ள நிலையில் 40 கிலோமீட்டர் தூரம் உள்ள சாலைகளும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. 13 மின் திட்டங்கள் மற்றும் 200 கனரக வாகனங்களும் அடித்து செல்லப்பட்டுள்ளது. மேலும் இந்த வெள்ளம் தொடர்பான வீடியோக்களை போலீசார் தற்போது வெளியிட்டுள்ள நிலையில் வைரல் ஆகி வருகிறது.
