
தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். ஆனாலும் கைது சம்பவங்கள் தொடரத்தான் செய்கிறது. தமிழக மீனவர்களை கைது செய்வது மட்டுமின்றி அவர்களுடைய விசை படகுகளையும் பறிமுதல் செய்து கொள்கிறார்கள். இந்த படகுகளை இலங்கை கடற்படையினர் ஏலத்தில் விடுகிறார்கள்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது தமிழக மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்தி அறிவித்துள்ளார். அதன்படி இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்படும் விசைப்படகு உரிமையாளர்களுக்கு நிவாரண தொகையானது 6 லட்ச ரூபாயிலிருந்து 8 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போன்று இலங்கை சிறையில் இருக்கும் மீனவ குடும்பங்களுக்கு தினசரி 350 ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படுகிறது. மேலும் இந்த நிவாரணத் தொகையையும் 500 ரூபாயாக உயர்த்துவதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.