
நாடாளுமன்றத்தில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் பல்வேறு துறைகளுக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பாதுகாப்புத்துறை, வேளாண்மை துறை, கல்வி, வேலைவாய்ப்பு, ஐடி துறை, ஊரக வளர்ச்சித்துறை, உள்துறை விவகாரங்கள் துறை, தொலைத்தொடர்பு துறை, எரிசக்தி துறை, சுகாதாரத்துறை, சமூக நலத்துறை மற்றும் தொழில்துறை போன்றவைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இது மக்களுக்கான பட்ஜெட் என்று பெருமிதமாக கூறியுள்ளார்.
அதாவது பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடி இது மக்களுக்கான பட்ஜெட் என்றும், சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிகாரம் தரும் விதமாக பட்ஜெட் அமைந்துள்ளது என்றும் பெருமிதமாக கூறினார். அதன் பிறகு வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான பட்ஜெட்டாக இது அமைந்துள்ளதாகவும், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் பல கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதத்திலும் பட்ஜெட் அமைந்துள்ளதாக தெரிவித்தார்.