
டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒரு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அதன் செயல்பாட்டை முடக்கும் விதமாக செல்போன், கணினி, பென்டிரைவ் உள்ளிட்ட அனைத்தையும் முடக்கியுள்ளனர். தனிமனித உரிமை எங்கே போனது என டாஸ்மாக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறி செயல்படுகிறது. தனிநபர் விதிமுறைகளுக்காக நடவடிக்கை எடுப்பதா? எந்த மூல வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது? எஃப் ஐ ஆர் பதியப்பட்ட பிறகு அமலாக்க துறைக்கு அங்கு என்ன வேலை? கூட்டாட்சி அமைப்பையே அமலாக்கத்துறை சிதைத்துள்ளது என கண்டனம் தெரிவித்தனர்.
இந்த தீர்ப்பு குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ் பாரதி கூறியதாவது, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் செல்வாக்கு உயர்ந்து வருவதை பொறுக்காமல் அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பாஜக தலைவர்கள் பேசி வந்தனர். அதற்கு சம்மட்டி அடி தரும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. எங்களது அனைத்து முடிவுகள் நியாயமானது என்பதற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒரு அங்கீகாரம். அமலாக்க துறையின் அக்கப்போர்களுக்கு இந்த தீர்ப்பு முடிவு கட்டியுள்ளது. தீர்ப்பை திமுக வரவேற்கிறது என கூறியுள்ளார்.