உரிய அனுமதி இன்றி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிடப் பகுதிகளை இடிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டிடத்திற்கு துணை போன அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

திருச்சி உய்யக்கொண்டான் பகுதியில் உரிய அனுமதி இன்றி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிட பகுதியை இடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அனுமதி இன்றி கட்டப்பட்ட இந்த கட்டிட பணிகளுக்கு துணை போன அனைத்து அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அது தொடர்பான அறிக்கையை மதுரை கிளையில் தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

வழக்கின் பின்னணி :

திருச்சி உய்யக்கொண்டான் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா உய்யக்கொண்டான் திருமலை பகுதியில் சுமார் 51 சென்ட் நிலத்தில் 100 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பு விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளது. 54 சதவீத விதிமீறல்கள் உள்ளன. இந்த முறைகேடுகள் தொடர்பாக திருச்சி மாநகராட்சி மற்றும் மாவட்ட அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை.. ஆகவே விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை இடிக்க வேண்டும். இந்த முறைகேடுகளை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்ய நாராயண பிரசாத் அமர்வு அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கட்டிடத்தின் பகுதிகளை இடிக்க உத்தரவிட்டனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அனைத்து அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு கட்டிடத்தின் உரிமையாளர் இந்த குடியிருப்பில் வீடுகளை வாங்கிய நபர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் மாற்றிடத்தையும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். அதேபோல இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளை முக்கியமற்ற பதவிகளில் பணிமாற்றம் செய்ய அறிவுறுத்திய நீதிபதிகள், அந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து 6 வாரத்தில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், தவறினால் வருவாய்த்துறை செயலர் நேரில் ஆஜராக நேரிடும் என்ற எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

ஒவ்வொரு வழக்கிலும் தவறு செய்யும் அதிகாரிகள் செய்யும் தவறுகளால் விபத்துக்கள் ஏற்படுகையில் அது தொடர்பான இழப்பீடுகள் எந்த அளவிற்கு உள்ளது என்பதை பொருத்து ஒவ்வொரு பிரிவிலும் தண்டனை வழங்கப்படும். இந்த வழக்கை பொறுத்தவரை ஒரு வேளை இதில் விபத்துக்கள் ஏற்பட்டால், அதனால் ஏற்படும் ஆபத்துக்கள் பெரிய அளவில் இருக்கும் என்பதால்அவர்களுடைய கடமைகளை எந்த அளவிற்கு அதிகாரிகள் மீறியிருக்கிறார்கள் என்பதை பொறுத்து அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்..