சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, பெண்கள் மற்றும் மதங்கள் குறித்து பொன்முடி அவதூறாகப் பேசியதாகக் கூறி, பா.ஜ.க. கவுன்சிலர் உமா ஆனந்த் என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் பொன்முடி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
எனினும், பொதுவெளியில் இத்தகைய சர்ச்சை கருத்துகளைப் பேசியது தொடர்பான குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதால், வழக்கை ரத்து செய்ய முடியாது என நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இந்த உத்தரவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏக்கள் சிலரிடம் பேரம் பேசியதாக கூறி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் மீது புகார்கள் எழுந்துள்ள நிலையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே திமுகவில் ஒரு மாஜி அமைச்சர் சிக்கலில் சிக்கி உள்ள நிலையில் தற்போது இன்னொரு முன்னாள் அமைச்சரும் வழக்கில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
