
கொல்கத்தாவில் கடந்த வருடம் அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மருத்துவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் சஞ்சய்ராய் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் சிபிஐ விசாரணை நடத்தியதில் அவர்தான் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியான நிலையில் சஞ்சய் ராய்க்கு 50,000 ரூபாய் அபராதமும் ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதோடு பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு 17 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் சஞ்சய் ராய்க்கு மரணதண்டனை வழங்கப்படும் என்று நாடே எதிர்பார்த்த நிலையில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தின் முன்பாக நேற்று மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தின் முதல்வர் மம்தாபானர்ஜி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறும் போது சிபிஐ வழக்கை சரியான முறையில் கையாளவில்லை எனவும் குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்கி இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேற்குவங்க மாநில உயர் நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி மேல்முறையீடு செய்து குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.