உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள  காஜியாபாத்தின் கௌசாம்பி பகுதியில் உள்ள மீடியா மஜெஸ்டிக் அபார்ட்மென்ட் குடியிருப்பு வளாகத்தில் கடந்த  மே 26ஆம் தேதி நடந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அதாவது லிப்டில் பயணித்த சிறுவன் ஒருவர், லிப்ட்  நகரும் போதே லிப்ட் கதவை வலுக்கட்டாயமாகத் திறக்க முயற்சித்துள்ளார். அதனால் லிப்ட் திடீரென நடுவில் முடங்கியுள்ளது.

அந்த சம்பவத்தின் CCTV காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. அதில், லிப்ட் மேலே செல்லும் நேரத்தில், அந்த சிறுவன் கதவை திறக்கும் முயற்சியில் ஈடுபடுவதை காணலாம். உடனே கதவு திறக்கப்பட்டதும், பாதுகாப்பு முறை செயல்பட்டு, லிப்ட் இயங்குவதை நிறுத்தியது. லிப்ட் நடுவில் திடீரென நிற்க, சிறுவன் பயந்து உதவி கேட்டு கதறினார்.

பின்னர், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர் வரவழைக்கப்பட்டனர். அதன்பின்  சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து குடியிருப்பு நிர்வாகம் தெரிவித்ததாவது, “லிப்டில் எந்தவித தொழில்நுட்ப கோளாறும் இல்லை. சிறுவனின் அசாதாரண செயல் காரணமாகவே இந்த சம்பவம் ஏற்பட்டது” என உறுதிப்படுத்தினர். இந்த சம்பவம், லிப்ட் பயணத்தின் போது பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது மிக அவசியம் என்பதை மீண்டும் உணர்த்தியுள்ளது.