மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், மாநிலத்தின் உயரிய விருதான ‘பெங்கால் விபூஷன்’ (Banga Vibhushan) விருதை பாஜகவின் மாநிலங்களவை எம்.பி.யான அனந்த மகாராஜுக்கு (Ananta Maharaj) வழங்கி ஒட்டுமொத்த அரசியலையும் அதிர வைத்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், வடமேற்கு வங்கத்தில் பலம் வாய்ந்த ‘ராஜ்பன்ஷி’ சமூகத்தின் தலைவராக இருக்கும் அனந்த மகாராஜை மேடைக்கே வரவழைத்து மம்தா கௌரவித்தது பாஜகவினரைத் திக்குமுக்காடச் செய்துள்ளது.
விருதைப் பெற்றுக்கொண்ட அனந்த மகாராஜ் மேடையிலேயே தனது சொந்தக் கட்சியான பாஜகவைக் கடுமையாக விமர்சித்துள்ளார். “பாஜக எம்.பி.யாக இருந்து என்ன பயன்? அவர்கள் எங்கள் சமூகத்திற்காக எதையும் செய்யவில்லை” என்று அவர் பொங்கியது பாஜக தலைமைக்கு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.
வடமேற்கு வங்கத்தில் உள்ள சுமார் 15-க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் ராஜ்பன்ஷி சமூகத்தினரின் வாக்குகள் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் காரணியாக உள்ளன.
அந்த வாக்குகளைத் தன் பக்கம் இழுக்கவே மம்தா இப்படி ஒரு ஸ்கெட்ச் போட்டு பாஜக எம்.பி.க்கே விருது கொடுத்து தன் பக்கம் சாய்த்துள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றனர். தேர்தலுக்கு முன்பே பாஜகவின் கோட்டையில் மம்தா பானர்ஜி ஓட்டைப் போட்டுள்ளது தேசிய அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.
