டெல்லி முன்னாள் துணை முதல் மந்திரியான மனிஷ் சிசோடியாவிற்கு மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ சம்மன் அனுப்பியது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராகி உள்ளார். எட்டு மணி நேரத்திற்கும் மேல் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு முடிவில் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வருகிற 4-ம் தேதி வரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூ சிபிஐ சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மணி சிசோடியா சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு அவசர வழக்காக சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. இருப்பினும் சிசோடியாவின் மனு விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திர சூட் மற்றும் பி எஸ் நரசிம்மா தலைமையிலான அமர்வு சட்டப்பிரிவு 32 கீழ் மனுவை நாங்கள் விசாரிக்க முடியாது என கூறியது. டெல்லியில் சம்பவம்  நடந்திருக்கும்போது சிசோடியா நேரடியாக சுப்ரீம் கோர்ட்டுக்கு வர முடியாது எனவும் அவருக்கான தீர்வுகள் விசாரணை நீதிமன்றம் மற்றும் டெல்லி ஹைகோர்ட்டிலேயே உள்ளது எனவும் அமர்வு கூறி உள்ளது. இதனால் டெல்லி ஹை கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் சிசோடியா மந்திரி பதவியில் இருந்து விலகினார். டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவாலுக்கு   இது குறித்து முன்னாள் மந்திரி மணிஷ் சிசோடியா எழுதியுள்ள பதவி விலக கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, உலகில் எந்த சக்தியும் நேர்மையற்ற முறையில் என்னை பணியாற்றும் படி செய்து விட முடியாது. கடந்த எட்டு ஆண்டுகளாக நேர்மையாக பணியாற்றிய பின் என் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. துரதிஷ்டவசம் என கூறியுள்ளார். மேலும் சிசோடியா கைது பற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜய் மேகன் கூறியதாவது, உண்மைகள் தெளிவாகத் தெரிகின்ற இந்த ஊழல் வழக்கில் சிசோடியா கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த வழக்குடன் உள்ள தொடர்புக்காக கெஜ்ரிவாலையும் கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவும் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவாலின் பதவி விலகல் எப்போது என கேள்வி எழுப்பியுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் ஆளும் பாஜகவை சேர்ந்த மாடல் பிரசாந்த் லஞ்ச வழக்கில் சிக்கியுள்ளார். டென்டரில் பங்கேற்கும் ஒப்பந்ததாரர் ஒருவரிடம் அவருக்கே ஒப்பந்தம் கிடைக்க வசதியாக ரூ.80 லட்சம் கேட்டு அவற்றில் முதல் தவணையாக ரூ.40 லட்சம் வாங்கும் போது பிரசாந்த் உட்பட ஐந்து பேர் லோக் ஆயுக்தாவிடம் சிக்கி உள்ளனர். இதனையடுத்து ரூ.40 லட்சம் விவகாரம் என நினைத்து எம்எல்ஏவின் வீடு, அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்திய போது எட்டு கோடி பணம் சிக்கியுள்ளது.

இது போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இது குறித்து டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் கூறியதாவது, அவர்களது மந்திரிகளில் ஒருவரிடம் ஒருவரின் மகனிடம் ரூபாய் 8 கோடி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அவரை இன்னும் கைது செய்யவில்லை. ஒருவேளை அவருக்கு அடுத்த வருடம் அவர்கள் பத்மபூஷன் விருது வழங்கலாம் மந்திரியின் மகனிடம் இருந்து எட்டு கோடி கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மணி சிசோடியாவை கைது செய்திருக்கின்றார்கள். சிசோடியாவிடம் நடத்திய சோதனையில் பத்தாயிரம் மட்டுமே அவரிடம் இருந்துள்ளது. சிசோடியாவின் வங்கிலாக்கரில் கூட எதுவும் கண்டறியப்படவில்லை என டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.