கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நந்தகுண்டபள்ளி கிராமத்தில் யசோதா என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை யசோதா தனக்கு சொந்தமான ஐந்து ஆடுகளை விவசாய நிலத்தில் மேய்த்து கொண்டிருந்தார். அப்போது ஆடுகள் சத்தம் போட்டதால் யசோதா முட்புதருக்கு சென்று பார்த்தார். அங்கு ஒரு பெரிய மலைப்பாம்பு ஆட்டை விழுங்கி கொண்டிருப்பதை கண்டு யசோதா அதிர்ச்சியடைந்தார்.

இதனை அறிந்து அக்கம் பக்கத்தினர் செல்வதற்குள் சுமார் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஆட்டை முழுவதுமாக விழுங்கியது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி வனத்துறையினர் வருவதற்குள் மலைப்பாம்பு அங்கிருந்து சென்றது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் மலைப்பாம்பு விழுங்கிய ஆடு 2 குட்டிகளை ஈன்றது குறிப்பிடத்தக்கதாககும். தற்போது தாய் ஆடு இல்லாமல் குட்டிகள் தவித்து வருகிறது. இந்த சம்பவம் பொது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது