போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கோவை விழாவில் ஊழியர்களின் கோரிக்கை மனுக்களை வாங்கிக் கொண்டார். அப்போது அரசு பேருந்து டிரைவரான கண்ணன் தனது 6 மாத குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்து அதிகாரிகள் குழந்தையை கையில் தூக்கினர். இதனையடுத்து கண்ணன் தனக்கு பணியிட மாறுதல் கேட்டு கோரிக்கை முன்வைத்தார். இதுகுறித்து டிரைவர் கண்ணன் கூறியதாவது, எனது சொந்த ஊர் தேனி. எனக்கு 5 வயதில் பெண் குழந்தையும், 6 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு எனது மனைவி உயிரிழந்தார்.

எனது குழந்தைகளை எனது தாயும், தந்தையும் பார்த்துக் கொள்கின்றனர். வயது முதிர்வு காரணமாக அவர்களால் குழந்தையை பார்த்துக் கொள்ள இயலவில்லை. அவர்களையும் சொந்த ஊரிலிருந்து கோவைக்கு அழைத்து வர முடியாத நிலையில் உள்ளேன். எனவே தேனிக்கு பணி மாறுதல் செய்ய வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தேன். இது குறித்து பலமுறை பொது மேலாளரிடம் கேட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. கடைசியாக அமைச்சரை பார்த்து குழந்தையுடன் கோரிக்கை வைத்துள்ளேன் என தெரிவித்தார்.

இந்நிலையில் அமைச்சர் சிவசங்கர் கண்ணனின் பணியிடமாறுதல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இது தொடர்பாக முதலமைச்சர் உத்தரவின் அடிப்படையில் கண்ணனை நிரந்தரமாக தேனிக்கு பணியிட மாற்றம் செய்து போக்குவரத்துக் கழக உதவி பொது மேலாளர் உத்தரவு பிறப்பித்தார். மனு அளித்த 7 மணி நேரத்தில் பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டதால் முதல் -அமைச்சருக்கும், அமைச்சருக்கும் கண்ணன் நன்றி தெரிவித்துள்ளார்.