உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள  மிர்சாபூர் மாவட்டத்தில், பயிற்சி பெற வந்த 54 வன துணை ஆய்வாளர்கள் (Sub-Inspectors) மீது தேனீக்கள் திடீரென தாக்குதல் நடத்தியதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கான்பூர் ரேஞ்சைச் சேர்ந்த பயிற்சி குழுவினர், ஜாரிநகர் பகுதியில் உள்ள வன நர்சரியை கடந்த செவ்வாய்க்கிழமை காலை பார்வையிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது, ஒரு பறவையின் தாக்குதலால் தேன் கூட்டம் கலைந்தது. அப்போது அங்கு நின்றிருந்த பயிற்சி ஆய்வாளர்களை தேனீக்கள் கடிக்கத் தொடங்கியது.

அந்த தாக்குதலில் 54 பேர் காயமடைந்த நிலையில், அவர்களில் 4 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். அனைத்து காயமடைந்தவர்களும் முதலில் மடிஹான் சமூக சுகாதார மையத்துக்கு (CHC) கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

தாக்குதல் நடந்த நேரத்தில், கிராம மக்கள் மற்றும் நர்சரியில் பணியாற்றும் ஊழியர்கள் போர்வைகள் மற்றும் தீயின் உதவியுடன் தேனீக்களை விரட்ட முயன்றனர். காயமடைந்தவர்களில் சுஜித் சிங், சுஷில் குமார், ராம் சிங் யாதவ், நவ்தீப், ராஜேந்திரா, விவேக் உள்ளிட்ட பலர் அடங்குகிறார்கள்.

CHC கண்காணிப்பாளர் டாக்டர் ராதேஷ்யாம் வர்மா, தீவிர காயமடைந்த 4 பேரை அவசர சிகிச்சைக்காக மாற்றி உள்ளதாக தெரிவித்துள்ளார்.  இசசம்பவத்தை தொடர்ந்து தலைமை வனப் பாதுகாவலர் அரவிந்த் ராஜ் மிஸ்ரா நேரில் சென்று சிகிச்சை பெறும் அதிகாரிகளின் உடல்நிலை குறித்து விசாரித்தார். இந்த சம்பவம் வனப் பாதுகாப்பு பயிற்சியின் போது ஏற்படும் அபாயங்களை எடுத்துக்காட்டுகிறது. மேலும் வன பகுதியில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.