அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் உள்ள ராக் ஹில் ஹனி பீ பார்ம்சில் ஒரு மர்ம நபர் விஷம் ஊற்றி சுமார் 5 லட்சம் இத்தாலிய தேனீக்களை கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்ணையின் உரிமையாளர் ஜெரி மாட்டியாச்சியோ, ஏப்ரல் 13-ஆம் தேதி தனது 5 ஏக்கர் பண்ணைக்குச் சென்றபோது, வெளியே வலுவான சங்கிலிகளும் பூட்டுகளும் இருப்பதை கவனித்துள்ளார்.

உள்ளே சென்ற உடனே பல ஆயிரம் கணக்கான தேனீக்கள் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்ட ஜெரி, அவற்றின் நாக்குகள் வெளியே வந்த நிலையில் இருந்ததால், அது பூச்சி கொல்லி விஷத்தால் கொல்லப்பட்டதென நம்பப்படுகிறது.

60 தேனீக் கூட்டங்கள் முற்றிலும் அழிக்கப்பட்ட நிலையில், மாட்டியாச்சியோக்கு சுமார் $20,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 16.5 லட்சம்) நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. “இது தவறுதலாக நிகழ்ந்தது இல்லை, திட்டமிட்ட முறையில்தான் செய்யப்பட்டது,” என 62 வயதான மாட்டியாச்சியோ ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாஃபர்டு கவுண்டி ஷெரிப் அலுவலகம் விசாரணை தொடங்கியுள்ளது. குற்றவாளியை பிடிக்க உதவும் தகவலுக்காக, அவர் $7,500 பரிசுத் தொகையை அறிவித்துள்ளனர். முன்னாள் அமெரிக்க ராணுவ அதிகாரியாகவும், பாதுகாப்புத் துறையில் பணியாற்றியவராகவும் இருந்த மாட்டியாச்சியோ, 2010ம் ஆண்டு முதல் தேனீ வளர்ப்பைத் தொடங்கி, 1,100க்கும் மேற்பட்ட தேனீக் கூட்டங்களை வளர்த்துவருகிறார்.

“நான் என் பாதையை விட்டுவிட மாட்டேன். என்னால் நல்ல தரமான தேனீ தயாரிக்க முடியும் என்பதை மீண்டும் நிரூபிப்பேன்,” என அவர் உறுதியுடன் கூறியுள்ளார். தேனீ பண்ணையை மீட்டெடுக்கவும், ஆதரவு தெரிவிக்க விரும்புவோர்கள் ஸ்டாஃபர்டு, ஸ்பொட்ஸில்வேனியா, மனாஸஸ், லோர்டன், ஒன் லவுடோன், ஃபால்ஸ் சர்ச் போன்ற நகரங்களில் உள்ள அவரது விற்பனை சந்தைகளுக்கு வந்து தேனீ வாங்கலாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.