நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடருக்கு முன்பாக 17ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று பிரகலாத் ஜோஷி தெரிவித்திருக்கிறார்.

வரும் 18ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறுமென இந்த கூட்டத்தொடருக்கான அறிவிப்பு வந்த நாளிலிருந்து இந்த கூட்டத்தொடருக்கான  முக்கிய அலுவல் என்ன ? என்னென்ன மசோதாக்கள் விவாதத்துக்கு கொண்டு வரப்படும் ? என்கின்ற பட்டியலை எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.  இதுவரை மத்திய அரசு அந்த விவரங்களை வெளியிடவில்லை.  ஆகவே தான்  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதமும் எழுதி இருந்தார்.

கடிதம் எழுதி இந்த கூட்டத்தொடரிலே என்ன விவாதிக்க இருக்கிறோம் ? எதற்காக இந்த கூட்டத்தொடர்  நடைபெறுகிறது ? என கேட்டிருந்தார். அதேபோல சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களுக்கும் அவர் கடிதம் அனுப்பி இருக்கிறார். ஆனால் அப்போதும் மத்திய அரசு  எந்த விவரங்களையும் வெளியிடவில்லை. சபாநாயகர் அலுவலகமும் விவரங்களை வெளியிடவில்லை. ஆகவே ஞாயிற்றுக்கிழமை கூட்டம் நடைபெறும் போது…. இது குறித்து மீண்டும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்த இருக்கின்றன.

மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளிலே மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு செய்வது தொடர்பான விவாதம் இந்த கூட்டத்திலே எடுத்துக் கொள்ளப்படுமா?  அல்லது ரோகிணி குழுவின் அறிக்கையின்படி ஓபிசி பிரிவினரின் உட்பிரிவுகளுக்கு எந்த மாதிரியான இட ஒதுக்கீடுகளை மாற்றி அமைக்க வேண்டும் என்பது தொடர்பான விவாதம்  என பல்வேறு கேள்விகள் இருக்கின்றன. இதைத்தவிர இந்தியா என்கின்ற பெயரை பாரத் என மத்திய அரசு சமீபத்திலே தொடர்ச்சியாக குறிப்பிட்டு இருக்கிறது. அது தொடர்பாகவும் ஏதேனும் பெயர் மாற்றம் தொடர்பான அறிவிப்பு இருக்குமா ? எனது கட்சிகள் எதிர்பார்க்கின்றன. அது குறித்த கேள்விகளையும் கேட்கின்றனர்.

இந்த கூட்டத்தொடரில் இப்படி பல்வேறு விஷயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கூட்டத்தொடர்  முதல் நாள் பழைய நாடாளுமன்றத்திலேயே நடைபெறும் எனவும்,  அதற்கு அடுத்த நாளான விநாயகர் சதுர்த்தி பண்டிகை வட இந்தியாவில் கொண்டாடப்படும் நாளான செவ்வாய்க்கிழமை அன்று இந்த கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நடத்தப்படும் எனவும் கருதப்படுகிறது. அதாவது விநாயகர் சதுர்த்தி தினத்தன்று புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கு துவக்க விழாவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது . இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை ஞாயிற்றுக்கிழமை கிடைக்குமா ? என எதிர் கட்சி காத்திருக்கின்றன.