கேரள மாநிலத்திலுள்ள பத்தனம்தித்தா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை சுவாமி ஐயப்பன் திருக்கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் பல கோடிபக்தர்கள்  வருகை தந்து ஐயப்பனை தரிசித்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்த ஆண்டு மகர விளக்கு பூஜையினையொட்டி வரும் நவம்பர் மாதம் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. . மகர விளக்கு பூஜைக்கு தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை  கேரளா தேவஸ்தான துறை அமைச்சர் வாசவன், நேரடியாக  கவனித்து வருகிறார். இவர் எருமேலி, நிலக்கல், பம்பை ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக சென்றுள்ளார்.

அப்போது பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, இந்த ஆண்டு மகர விளக்கு பூஜை தொடங்கவுள்ளது. எனவே முன்னேற்பாடாக பக்தர்களுக்கு தேவையான அப்பம், அரவணை பிரசாதங்கள் தயாரான நிலையில் வைக்கப்பட உள்ளன. குறைந்தது 25 லட்சம் டின் அரவணை, அப்பம் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் நிலக்கல்லில் 2500 வாகனங்கள் கூடுதலாக நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று எருமேலியில் கூடுதலாக 2000 வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் நிலக்கல்லில் மட்டும் ஒரே நேரத்தில் 10000 வாகனங்கள் நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் பம்பையில் 450 கழிப்பிட வசதிகள், நிலக்கல்லில் 1120 கழிப்பிட வசதிகள், மேலும் சபரிமலையின் சன்னிதானத்தில் 1005 கழிப்பிட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஐயப்பனை காண வரும் பக்தர்கள் சுமார் 25 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்கள் ஓய்வெடுக்க வசதியாக 18 மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 3,600 பேர் ஒரே நேரத்தில் ஓய்வு எடுக்கலாம். இதேபோன்று நிலக்கல்லில் 7000 பேர் ஓய்வெடுப்பதற்காக மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பம்பையில் இருந்து கோவிலின் சன்னிதானம் வரை சுக்குநீர் வழங்க 60 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தொடர்ந்து சுக்கு நீர் வழங்கப்படும். பம்பை, நிலக்கல், அப்பிச்சி மேடு போன்ற பக்தர்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் எல்லாம் 24 மணி நேரம் மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தேவஸ்தான அமைச்சர் கூறினார்.