கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பீச் ரோடு சந்திப்பில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆட்டோ ஓட்டுனரான காந்தி என்பவர் பீச் ரோடு பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தம் அருகே தனது வீட்டிற்கு முன்பு ஆட்டோவை நிறுத்தி வைத்ததாக தெரிகிறது. அப்போது போலீசார் காந்தியிடம் ஆட்டோ போக்குவரத்திற்கு இடையூறாக நிற்கிறது. எனவே ஓரமாக நிறுத்தங்கள் என கூறியதால் காந்திக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் போலீசார் தாங்கள் சொல்வதைக் கேட்காமல் போக்குவரத்திற்கு இடையூறாக ஆட்டோவை நிறுத்தி இருந்ததாக கூறி காந்திக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

இதனால் காந்தி தனது மனைவி மற்றும் மகனுடன் பீச் ரோடு சந்திப்புக்கு வந்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்ததும் போலீசார் அவரை சமாதானப்படுத்தி குடும்பத்தினருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் பணியில் இருந்து போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸ் ஏட்டு சங்கர் தன்னை பணி செய்துவிடாமல் காந்தி தடுத்ததாக கூறி கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.