தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள சாலையில் வருகிற 27ம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பான பணிகள் கடந்த 4-ம் தேதி பந்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்த மாநாட்டிற்கு வருகிற தொண்டர்களுக்கு உணவு, குடிநீர், கழிப்பறை ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் மாநாட்டிற்கான மேடை அமைக்கும் பணி சினிமா கலை இயக்குனர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த முதல் மாநாட்டின் நினைவாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் 100 அடி உயரத்தில் நிரந்தரக் கொடி கம்பம் அமைக்கப்படுகிறது. இதனை தவெக கட்சியின் தலைவர் விஜய், நிகழ்ச்சி அன்று கொடியேற்ற உள்ளார்.

இந்த மாநாட்டிற்காக விஜய் அமைத்துள்ள குழுவில். குழு தலைவராக புஸ்சி ஆனந்த், ஒரு ஒருங்கிணைப்பாளர், 12 குழு உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளது. இது தவிர பொருளாதாரக் குழுவில் 3 பேரும், சட்ட நிபுணர்கள் குழுவில் 3 பேரும், வரவேற்பு குழுவில் 10 பேரும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவில் 14 பேரும், சுகாதாரக் குழுவில் 55 பேரும், போக்குவரத்து ஒருங்கிணைப்பு குழுவில் 14 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். வாகன நிறுத்த குழுவில் 41 பேரும், மகளிர் பாதுகாப்பு குழுவில் 49 பேரும், ஒட்டுமொத்த பாதுகாப்பு மேற்பார்வை குழுவில் 111 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேடை ஒருங்கிணைப்பு குழு, இருக்கை மேலாண்மை குழு, மாநாட்டு தீர்மான குழு, உபசரிப்பு குழு, பந்தல் அமைப்புக்குழு, உணவு வளங்கள் குழு என 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளனர். அதோடு இந்த மாநாட்டு பணிகளை ஒருங்கிணைக்க மாவட்ட தலைவர்கள் மற்றும் அணித்தலைவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.