விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்குத் தணிக்கை வாரியம் முட்டுக்கட்டை போட்டு வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பிரதமர் மோடிக்கு அதிரடியான சவால் ஒன்றை விடுத்துள்ளார்.
தனது எக்ஸ் (X) தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அன்புள்ள பிரதமர் மோடி அவர்களே, நடிகர் விஜய்யின் கலைப்படைப்பைக் குறிவைத்து முடக்குவது அதிகார துஷ்பிரயோகம். அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்துப் படத்தின் ரிலீஸைத் தள்ளிப்போடுவது தயாரிப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் இழைக்கப்படும் அநீதி” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமரை நேரடியாக வம்புக்கு இழுத்துள்ள அவர், “நடிகர் விஜய்யைப் பார்த்துப் பயப்படாமல், அரசியல்வாதி விஜய்யை நேருக்கு நேர் எதிர்கொண்டு உங்கள் 56 அங்குல மார்பு கூற்றை நிரூபியுங்கள்.
தமிழகத்தில் உங்கள் மிரட்டல் அரசியல் ஒருபோதும் பலிக்காது” என ஆவேசமாகச் சாடியுள்ளார். இதேபோல், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியும் தணிக்கை வாரியம் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்டித்துள்ளார்.
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) காங்கிரஸ் கூட்டணி அமைக்கத் துடிக்கும் சூழலில், இந்தச் சவால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
