தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் தங்களது படைப்புகளுக்கு சேவை வரிசெலுத்த வேண்டும் என ஜிஎஸ்டி ஆணையர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அவற்றில் ஏ.ஆர்.ரகுமான் சேவை வரியாக தன் படைப்புகளுக்கு 6 கோடியே 79 லட்ச ரூபாய் சேவை வரி செலுத்தவேண்டும் என சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி ஆணையர் கடந்த 2019 ஆம் வருடம் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கடந்த 2020 ஆம் வருடம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதற்கு ஜிஎஸ்டி ஆணையர் பதில் மனு அளித்ததாவது, வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் ஏ.ஆர். ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அவரது புகழை கலங்குப்படுத்தும் நோக்கம் ஏதுமில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோன்று 1 கோடியை 84 லட்சம் ரூபாய் சேவை வரி செலுத்த சொல்லி ஜிஎஸ்டி ஆணையர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமாரும் மனுதாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு நேற்று பிப்ரவரி 2ம் தேதி நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இசை படைப்புகளுக்கான சேவை வரி செலுத்த வேண்டும் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஜி.வி.பிரகாஷ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.

அதோடு ஏ.ஆர்.ரகுமான் வரி விதிப்பை எதிர்த்து ஜிஎஸ்டி மேல் முறையீட்டு அதிகாரியிடம் முறையீடு செய்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனினும் ஜி.வி.பிரகாஷை பொறுத்தவரையிலும் அவருக்கு நோட்டீஸ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதுவரையிலும் எந்த இறுதி உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.