உலகில் மிக அச்சுறுத்தும் நோய்களில் ஒன்றாக புற்றுநோய் இன்றும் நிலவி வருகின்றது. தற்போது எறும்புகளை வைத்து புற்றுநோயை கண்டறிய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். விலங்குகளுக்கு பொதுவாக வாசனையை நுகரும் சக்தி மனிதர்களை காட்டிலும் அதிகம் என பல்வேறு ஆய்வுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இத்தகைய சிறப்பு இயல்புகளை கொண்ட எறும்புகளை பல்வேறு சோதனைகளுக்கு ஆய்வாளர்கள் உட்படுத்தி வருகின்றார்கள்.

உலக சுகாதார அமைப்பின் அறிக்கைப்படி ஆறு பேரில் ஒருவருக்கு புற்றுநோய் இருக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புற்றுநோய் பரிசோதனைகள் விலை உயர்ந்தது என்பதால் வறுமையில் வாழும் மக்களுக்கு இது கடினமான காரியமாக விளங்கி வருகின்றது. இந்நிலையில் மனிதர்களின் சிறுநீரை பயன்படுத்தி எறும்புகளை கொண்டு புற்றுநோயை கண்டறியும் முறையை அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

எறும்புகளின் கொம்புகள் அதிகமான உணர்திறன் கொண்டவை. எறும்புகள் பொதுவாக சர்க்கரை கலந்த உணவுகளை எளிதில் மோப்பம் பிடித்து விடும். இதனைத் தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் ஒரு புற்றுநோய் செல்கள் கொண்ட ஒரு எலியின் சிறுநீருக்கு அருகிலும் சாதாரண எலியின் சிறுநீர் அருகிலும் சர்க்கரை கரைசலை வைத்தனர்.

இதனை அடுத்து எறும்புகள் சாதாரண எலியின் சிறுநீர் அருகே வைக்கப்பட்டிருந்த சர்க்கரை கரைசலை மட்டும் சாப்பிட்டு புற்றுநோய் செல்கள் கொண்ட ஒரு எலியின் சிறுநீருக்கு அருகே வைக்கப்பட்ட சர்க்கரை கரைசலை சாப்பிடவில்லை. விலங்குகளிடையே நடந்த இந்த சோதனையின் வெற்றியை தொடர்ந்து தற்போது மனிதர்களிடம் இந்த சோதனை நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். தற்போது மனிதர்களிடம் நடத்தப்படும் இந்த சோதனை வெற்றி பெற்றால் உலகில் மாபெரும் மருத்துவ மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுகின்றது.