ஆந்திர தகவல் தொடர்பு மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறைகளின் அமைச்சரும், முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனான நாரா லோகேஷ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி குறித்து பேசியுள்ளார். இவர் கூறியதாவது, ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தன்னை சதாம் உசேன் போன்றவர் என நினைத்துக் கொண்டு 30 ஆண்டுகள் ஆட்சியில் இருப்போம் என எண்ணியுள்ளார்.

எனது தாத்தா முதல்வராக பணியாற்றியுள்ளார். எனது அப்பா முதல்வராக உள்ளார். ஆனால் இதுபோன்று பெரிய மாளிகையை நான் பார்த்ததே இல்லை. வெறும் நான்கு பேர் வசிப்பதற்கு 700 கோடி ரூபாய் செலவில் அரண்மனை போன்று வீடு. நம் நாட்டின் பிரதமருக்கு கூட இவ்வளவு பெரிய வீடு கிடையாது. அந்த அரண்மனை போன்ற வீட்டை என்ன செய்வது என்பது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்து இருந்தார்.சதாம் உசேன் ஈராக்கின் அதிபராக 1979 முதல் 2003 வரை அந்நாட்டில் சர்வாதிகார ஆட்சியை நிலைநாட்டி வந்தவர்  என்பது முக்கியமானதாகும்.