அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அலுவலகம் வருவது குறித்து புதிய விதிமுறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுள்  ஒன்று அமேசான். இதில்,  ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவ்வப்போது தனது பணியாளர்களுக்கு புதிய விதிமுறைகளை வழி வகுத்து அதை கடைபிடிக்க வைப்பது அமேசானின் வழக்கம். அந்த வகையில்,  தற்போது வாரத்தில்  குறைந்தது மூன்று நாட்களாவது கட்டாயம் அலுவலகத்திற்கு  வந்து ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்ற விதிமுறையை தற்போது அமேசான் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதை முறையாக பின்பற்றாதவர்களை எப்படி கையாள வேண்டும் எனவும், அவர்கள்  மீது பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரத்தை மேனேஜர் பணியில் இருப்பவருக்கு வழங்கியும் உள்ளது அமேசான் நிறுவனம். அதன்படி, மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றாதவர்களிடம்  முதற்கட்டமாக மின்னஞ்சல் மூலம் அதற்கான காரணம் குறித்து அறிய உரையாடல் நிகழ்த்தப்படும். பின் அது ஆவணப்படுத்தப்படும்.

இரண்டாவது கட்டமாக தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட நபர் விதிமீறலில் ஈடுபட்டால், அவர்களுக்கென காலக்கெடு ஒன்று கொடுக்கப்பட்டு, அதில் நேரடியாக கூட்டம் நடத்தப்பட்டு, அதில் கட்டாயம் வாரம் மூன்று முறையாவது அலுவலகத்திற்கு வரவேண்டிய காரணம் குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் அறிவுறுத்தப்படும். இந்த கூட்டத்தின் முடிவில் மேனேஜர் சம்பந்தப்பட்ட நபருக்கு இது தொடரும் பட்சத்தில் பணிநீக்கம் செய்யப்படுவீர்கள் என்ற எச்சரிக்கையை வழங்குவார்.

மூன்றாவது கட்டமாக தொடர் விதிமீறலில் ஈடுபட்ட நபர் HR ஐ சந்திக்கும் சூழ்நிலை  ஏற்பட்டு,  அதில், HR  ஆக இருப்பவர் எழுத்துப்பூர்வமாக சம்பந்தப்பட்ட நபருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கலாம்  அல்லது பணி நீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை அவர் மீது மேற்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. அதேபோல், வெகு தூரத்திலிருந்து அமேசான் அலுவலகம் வருபவர்கள் தாங்கள் வசிக்கும்   பகுதிக்கு அருகில் ஏதேனும் அமேசான் Hub  இருந்தால் அங்கே சென்று பணியாற்ற விண்ணப்பிக்குமாறும்,  தொடர்ந்து சிரமத்தை சந்திக்க நேர்ந்தால் தன்னார்வ ராஜினாமாவை ஏற்குமாறு நிறுவனத்திடம் வலியுறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது அமேசான் ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.