ஒடிசா மாநிலம் ஜகத்சிங்க்பூர் மாவட்டத்தில் தனியார் எஸ்விஎம் என்ற தன்னாட்சிக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் அறிவிப்பு பலகையில் பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் மாணவிகள் அனைவரும் குறைந்தது ஒரு ஆண் நண்பராவது வைத்திருக்க வேண்டும் எனவும், பிப்ரவரி 14-ஆம் தேதி கல்லூரிக்கு வரும் மாணவிகள் கண்டிப்பாக தங்களுடைய ஆண் நண்பரை உடன் அழைத்து வர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டதோடு தங்களுடைய ஆண் நண்பர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் கல்லூரியில் காண்பித்தால்தான் கல்லூரிக்கு அனுமதிக்கப் படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த சுற்றறிக்கை மாணவிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்களுக்கு மாணவிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் கல்லூரி முதல்வர் தான் அந்த சுற்றறிக்கையை அனுப்பவில்லை எனவும், தன்னுடைய கையெழுத்தை யாரோ போலியாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றும் கூறினார். இது போலியான கையெழுத்து என்று நிரூபிக்கப்பட்ட நிலையில் கல்லூரி முதல்வர் இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ள நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.