தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி தகவல்கள் பரவிய நிலையில் பீகார் மாநிலத்தின் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தார்கள். ஆனால் தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் யாரும் தாக்கப்படுவது கிடையாது அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று தமிழக காவல்துறை விளக்கம் கொடுத்திருந்தது. வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வந்த தகவல்களை அடுத்து முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர் சி.வி கணேசன் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது தமிழ்நாட்டுக்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமாரிடம் தொலைபேசி மூலம் ‌ தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அனைத்து தொழிலாளர்களும் எங்களுடைய தொழிலாளர்கள். எங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவுபவர்கள். அவர்களுக்கு எந்த பாதிப்பும் நேராது என முதல்வர் ஸ்டாலின் உறுதி கொடுத்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலீஸ் செய்திகள் பரப்பிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேமானந்த் சின்கா கூறியுள்ளார்.