மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண சீட்டு பரிசோதகர் என்னும் பெயரில் செயல்படும் நபர்கள் மீது காவல்துறை மூலமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கூறியுள்ளது. இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டைகள் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி வசூல் இயந்திரத்தின் மூலமாக மட்டுமே நுழைவு மற்றும் வெளியேறும் போது சரிபார்க்கப்படுகிறது.

இதில் ஏதேனும் சிக்கல் ஏற்படும் சமயத்தில் மெட்ரோ ரயில் நிலையங்களில் அமைந்துள்ள கட்டண அலுவலக அறைகளில் மட்டுமே இது போன்ற பிரச்சினைகள் சரி செய்து தரப்படும். வேறு எந்த வகையிலும் பயண சீட்டு பரிசோதனை செய்யப்படுவதில்லை. அதனால் மெட்ரோ ரயில் பயணிகளிடம் பயண சீட்டு பரிசோதகர் என்னும் பெயரில் அநாகரீகமான  செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறையினர் மூலமாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதேபோல் சந்தேகப்படும் நபர்களை பயணிகள் கண்டறிந்தால் அருகில் உள்ள காவல் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய கட்டுப்பாட்டாளரிடம் புகார் தெரிவிக்கலாம். மேலும் சந்தேகப்படும் நபர்களிடம் பயணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களால் ஏற்படும் இழப்புகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பொறுப்பேற்காது என கூறப்பட்டுள்ளது.