ஜம்மு காஷ்மீரில் உள்ள ரியாசி மாவட்டத்தில் உள்ள வைஷ்ணவ் தேவி கோவிலுக்கு 53 பக்தர்கள் ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது அவர்கள் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக இறந்த நிலையில் 41 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில், தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் டிரெண்டாகி வருகிறது.

அதாவது All Eyes on Vaishno Devi Attack (எல்லா கண்களும் வைஷ்ணவி தேவி தாக்குதல் மீது) என்பதுதான் அது. இந்த போஸ்டை தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி தன்னுடைய  instagramல் ஸ்டோரி ஆக வைத்துள்ளார். இது தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. இவருடைய மனைவி இந்தியாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய போது பிரபலங்கள் உட்பட பலர் எல்லா கண்களும் ரஃபா மீது என்ற போஸ்டரை பகிர்ந்து வந்தனர். இதற்கு இஸ்ரேல் அக்டோபர் 7-ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு பதிலடிக் கொடுத்திருந்தது. மேலும் தற்போது காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து இந்த போஸ்டரை வைரலாக்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.