காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019-ஆம் ஆண்டு அது என்ன மோடியின் பெயரை அனைத்து திருடர்களும் பின்னால் வைத்துக் கொள்கிறார்கள் என்று கூறியதற்கு பிரதமர் மோடியை அவதூறாக பேசினார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பாஜக எம்எல்ஏ ஒருவர் தொடர்ந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை கொடுத்துள்ளது. தீர்ப்பு வந்த 24 மணி நேரத்திற்குள் நாடாளுமன்ற மக்களவையில் இருந்து ராகுலை தகுதி நீக்கம் செய்துள்ளனர். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ராகுலுக்கு ஆதரவு தெரிவித்தும் பாஜக அரசை விமர்சித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் ராகுல் காந்திக்கு 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து வழங்கிய தீர்ப்பு ஏற்புடையது அல்ல. கருத்துரிமையை முற்றிலும் பறிக்கும் வகையில் இந்த தீர்ப்பு உள்ளது. அதோடு ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டிருப்பது ஜனநாயக விரோத செயலாகும். நாட்டை ஆளும் பாஜக அரசு அதிகாரத்தை வைத்து அத்துமீறலும் அடாவடித்தனமும் செய்து வருகிறது. முறைகேடான தன்னாட்சி அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் குரல்வலையை நசுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. அதிகார வர்க்கத்தின் இந்த கொடுங்கோல் செயலுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் சார்பில் அறைகூவல் விடுத்துக் கொள்கிறேன் என சீமான் பதிவிட்டுள்ளார்.