பிரான்ஸ் நாட்டுக்கு செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். இந்த மாநாட்டிற்கு பிரதமர் மோடி தான் தலைமை தாங்குகிறார். அதன் பிறகு பிரான்ஸ் நாட்டின் அதிபர் மேக்ரானுடன் இணைந்து அந்த நாட்டில் இந்தியாவின் முதல் தூதரகத்தை மோடி திறந்து வைக்கிறார். இதைத்தொடர்ந்து இருவரும் சேர்ந்து வெப்ப அணுசக்தி உலை திட்டத்தை பார்வையிடுகிறார்கள். இங்கிருந்து அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அழைப்பை ஏற்று அமெரிக்காவிற்கு பிரதமர் செல்ல இருக்கிறார்.

கடந்த 20-ம் தேதி அமெரிக்க நாட்டின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப்  பொறுப்பேற்ற பிறகு உலக நாடுகளின் மீது வரி விதிப்பு மற்றும் அமெரிக்காவில் சட்டவிரோத குடியிருப்பு வாசிகளை நாடு கடத்துவது என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் இந்தியர்களை நாடு கடத்தும் போது அவர்களுடைய கை மற்றும் கால்களில் விலங்கு போடப்பட்டிருந்தது சர்ச்சையாக மாறிய நிலையில் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் கொடுத்தார். மேலும் இந்த சர்ச்சைகளுக்கு இடையே அதிபர் ட்ரம்பை மோடி சந்திக்க இருப்பது கவனம் பெற்றுள்ளது.