ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் வாஷ் அவுட் செய்தது..

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி க்ளீன் ஸ்வீப் செய்தது. 3வது ஒருநாள் போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான். தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பின் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3வது ஒருநாள் போட்டியில் அந்த அணி அபாரமாக செயல்பட்டு வெற்றி பெற்றது. 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் அரைசதம் அடித்தனர். ரிஸ்வான் 67 ரன்களும், பாபர் 60 ரன்களும் எடுத்தனர். மேலும் சல்மான் அலி ஆகா 38 ரன்களும், முகமது நவாஸ் 30 ரன்களும்,  ஃபகார் ஜமான் 27 ரன்களும் எடுத்தனர். இமாம்-உல்-ஹக் 13, சவுத் ஷகீல் 9, ஷதாப் கான் 3, ஃபஹீம் அஷ்ரப் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். ஷஹீன் அப்ரிடி ஆட்டமிழக்காமல் 2 ரன்கள் எடுத்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 268 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் குல்பாடின் நைப் மற்றும் ஃபரீத் அகமது மாலிக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஃபசல்ஹக் ஃபரூக்கி, முஜீப் உர் ரஹ்மான் மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 48.4 ஓவர்களில் 209 ரன்களுக்கு சுருண்டது. ஆப்கானிஸ்தானுக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாராலும் நீண்ட இன்னிங்ஸ் ஆட முடியவில்லை. ஆனாலும் கடைசி கட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் 37 பந்துகளில் 64 ரன்கள் குவித்து ரசிகர்களை மகிழ்வித்தார். அவர் தனது இன்னிங்ஸில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை அடித்தார், ஆனால் அவரால் அணியை வெல்ல முடியவில்லை. மேலும் ஷஹிதுல்லா 37 ரன்களும், ரியாஸ் ஹசன் 34 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். பாகிஸ்தான் தரப்பில் ஷதாப் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷஹீன் அப்ரிடி, ஃபஹீம் அஷ்ரப், முகமது நவாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி 3-0 என தொடரை முழுவதுமாக கைப்பற்றியது.

ஆப்கானை வாஷ் அவுட் செய்ததன் மூலம் பாகிஸ்தான் அணி ஐசிசி ஒருநாள் தரவரிசை புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது.  ‘உலகின் நம்பர் 1 ஒருநாள் அணி என்ற சாதனையை படைத்துள்ளது பாகிஸ்தான் அணி..