திமுகவின் இலக்கிய அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரும், அமைப்பு செயலாளருமான TKS இளங்கோவன், 1972 தொடங்கி, 2018 வரை நமக்கு எதிரியாக,  நாம் பார்த்தது அதிமுகவுக்கு தலைமை ஏற்று இருந்த எம்ஜிஆர் அவர்களும், ஜெயலலிதா அவர்களும்.. கொள்கை ரீதியாக அவர்களோடு முரண்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. காரணம்,  எம்ஜிஆர் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திலே அறிஞர் அண்ணா அவர்களிடம் இருந்து கொள்கையை கற்றுக் கொண்டு…  தொடர்ச்சியாக அந்த பாணியில் இருந்து பெரிய அளவில் விலகாமல் அரசியல் நடத்தினார்.

ஆனால் இன்றைக்கு நமக்கு ஒரு எதிரி தோன்றி  இருக்கிறார் என்பதை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எதிரி கொள்கை ரீதியான எதிரி. பாஜக என்பது ஒரு கொள்கை ரீதியான எதிரி. அந்த எதிரி இங்கே உள்ள இன்றைய அதிமுகவையும் சேர்த்து இயக்கிக் கொண்டிருக்கின்ற ஒரு எதிரி.  இவர்கள் கூட்டணி முறிவு  எல்லாம் சொல்வார்கள்….  கொள்கை ரீதியாக அவர்கள் எதிர்த்து பேசுவதற்கு இவர்களுக்கு துணிவு கிடையாது…

இந்த நேரத்தில் தமிழர்கள் யார் ? தமிழர்களின் பெருமை என்ன ?  தமிழனுடைய பண்பாடு என்ன ? தமிழர்கள் எப்படி வளர்ந்தவர்கள் ? எப்படி வாழ்ந்தவர்கள் என்பதை எடுத்துச் செல்வதற்கு நம்முடைய இலக்கியங்கள் தான் ஆதாரங்களாக இருக்கின்றன. அந்த இலக்கியங்களை படித்து,  நம்முடைய வாழ்வியலை மக்களிடையே சொல்ல வேண்டும் என்கின்ற பொறுப்பும், கடமையும், உரிமையும் நம்முடைய இலக்கிய அணிக்குத்தான் இருக்கிறது என்பதை நான் சொல்ல ஆசைப்படுகிறேன் என் தெரிவித்தார்.