
இந்தோனேசியா வடக்கு சுமத்ரா கோலங் பகுதியில் வெல் ஜோஸ்வா என்பவர் வசித்து வருகிறார். சவப்பெட்டிகள் தயாரிப்பது தொழிலாக செய்து வந்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு இவர் தங்கி இருந்த வீட்டின் கூரையின் மீது திடீரென மிகப்பெரிய கல் ஒன்று விழுந்துள்ளது. இந்த கல் விழுந்த வேகத்தில் தரையை பிளந்து கொண்டு 15 சென்டிமீட்டர் ஆழத்திற்கு சென்றது. இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த ஜோஸ்வா அந்த கல்லை எடுத்து பார்த்த போது இது பூமியில் இருக்கக்கூடிய கல் கிடையாது என்பதை உறுதி செய்தார். இதன்பின்பு அதை ஆய்விற்கு உட்படுத்தினார். ஆய்வின் பிறகு 2 கிலோ எடை கொண்ட இந்த கல் சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்தது என்பது தெரியவந்துள்ளது.
இதனை அறிந்த அமெரிக்காவின் தொழிலதிபரான ஜாரெட் காலின்ஸ் என்பவர் இந்தோனேசியாவிற்கு நேரடியாக சென்று இந்திய மதிப்பில் சுமார் 14 கோடி ரூபாய் கொடுத்து அந்த கல்லை வாங்கியுள்ளார். மேலும் சவப்பெட்டிகளை தயாரித்து மிகவும் ஏழ்மையிலிருந்த ஜோஸ்வா ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறியுள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது ஒரே நாளில் என்னுடைய வாழ்க்கை மாறி உள்ளது எனவும், இந்த பணத்தில் ஒரு பகுதியை நான் தேவாலயம் கட்டுவதற்கு பயன்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். ஒரே நாளில் பணக்காரர் ஆவது குறித்து நாம் படத்தில் பார்த்திருக்கிறோம், ஆனால் இந்தோனேசியாவை சேர்ந்த ஒருவர் ஒரு விண் கல்லால் கோடீஸ்வரர் ஆனது அவருடைய அதிர்ஷ்டம் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.