நாட்டிலுள்ள தலைவர்களையும் ஊடகங்களையும் வேண்டுமானால் அதானியும் அம்பானியும் விலைக்கு வாங்க முடியும் எனவும் ராகுல் காந்தியை அவர்களால் விலைக்கு வாங்க முடியாது எனவும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உத்திர பிரதேச மாநிலம் லோனியில் ராகுல் காந்தியின் ஒற்றுமையாத்திரியை வரவேற்றுப் பேசிய பிரியங்கா காந்தி தனது சகோதரர் ராகுல் காந்தி ஒரு போராளி எனவும் தாம் அவரைப் பற்றி மிகவும் பெருமைப்படுவதாகவும் தெரிவித்தார்.

கௌதம் அதானி, முகேஷ் அம்பானி நாட்டின் பெரிய அரசியல்வாதிகளையும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் ஊடகங்களையும் விலைக்கு வாங்கி இருக்கலாம் எனவும் ஆனால் அவர்களால் ராகுல் காந்தியை விலைக்கு வாங்க முடியவில்லை. ஒரு போதும் அவ்வாறு வாங்க முடியாது எனவும் தெரிவித்தார்.

மத்திய பாஜக அரசு ராகுல் காந்தியின் செயல்பாடுகளை சிதைப்பதற்கான அனைத்து அழுத்தங்களையும் கொடுத்ததாகவும் அவருடைய மாண்புகளை நற்பெயர்களை கெடுக்க பல்லாயிரம் கோடிகளை செலவழித்ததாகவும் குற்றம் சாட்டினர். ராகுல் காந்தியை குறிவைத்து விசாரணை அமைப்புகள் அனுப்பப்பட்டதாகவும் அவர் ஒரு போர் வீரர் என்பதால் பயப்படவில்லை எனவும் உண்மையின் பாதையில் இருந்து விலகாமல் உத்வேகத்துடன் செயல்பட இவை ராகுல் காந்திக்கு தூண்டுகோலாக அமைவதாகவும் தெரிவித்தார்.