நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சின்னையா மன்ராயர் ராஜாமணி தம்பதியினருக்கு நான்காவது மகனாக கடந்த 1927-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி பிறந்தார். திரை உலகில் நுழைவதற்கு முன்பாக சிவாஜி கணேசன் மேடை நாடகங்களில் நடித்துள்ளார். இவர் சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்தார்.

அவரது நடிப்பு திறமையை பாராட்டி தந்தை பெரியார் அவரை சிவாஜி கணேசன் என அழைத்தார். அன்றிலிருந்து அவருக்கு சிவாஜி கணேசன் என்ற பெயர் நிலைத்து நின்றது. நடிப்பிற்கு தனி உதாரணமாக திகழ்ந்த சிவாஜிகணேசன் 300-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள், 9 தெலுங்கு திரைப்படங்கள், இரண்டு ஹிந்தி திரைப்படங்கள், ஒரு மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர்களான வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, சரித்திர வீரர்களான ராஜராஜ சோழன், கர்ணன் போன்ற கதாபாத்திரங்களில் திறமையாக நடித்து மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்தார். கடந்த 1952-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் திரைக்கதை வசனத்தில் உருவான பராசக்தி திரைப்படத்தின் மூலம் சிவாஜி கணேசன் திரையில் அறிமுகம் ஆனார்.

இதனையடுத்து திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர், கந்தன் கருணை, திருமால் பெருமை போன்ற அனைத்து கடவுள்களின் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். சிவாஜி கணேசனின் நடிப்பு திறமைக்காக அவருக்கு கலைமாமணி விருது, பத்மஸ்ரீ விருது, பத்மபூஷன் விருது, தாதா சாகிப் பால்கே விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.