சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். கடந்த 31ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ரஜினிகாந்த் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வயிற்றுப் பகுதியில் ரத்த நாளம் வீக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ரத்த நாளங்களின் வீக்கத்தை குறைப்பதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டது.பின்னர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த்க்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
சற்று சரியான பிறகு அவர் நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டார். பின்பு நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் நன்றாக உரையாடி உள்ளார். இதைத்தொடர்ந்து உடல்நலம் சரியாகி ரஜினிகாந்த் வீட்டிற்கு வந்துவிட்டார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி சில நாட்கள் ரஜினிகாந்த் வீட்டிலேயே ஓய்வெடுக்க உள்ளார். இதனால் படத்தின் சூட்டிங் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் இல்லாத பகுதிகளை இயக்கி வருகிறார். ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து ரசிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள்,பிரபல நடிகர்கள் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் வீடு திரும்பிய ரஜினிகாந்த் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, மருத்துவமனையில் இருக்கும் போது தன்னை நலம் விசாரித்த தன்னுடைய தெய்வங்களான ரசிகர்களுக்கும், சினிமாத்துறை நண்பர்களுக்கும், ஊடகத்துறை அன்பர்களுக்கும் எனது உள்ளம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடல் நலம் குறித்து விசாரித்த மற்றும் பிரார்த்தனை செய்த கோடான கோடி மக்களுக்கும், ரசிகர்களுக்கும் தனது உளமார்ந்த நன்றிகளை கூறுகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார். மேலும் அவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நடிகர் அமிதாபச்சன் போன்ற முக்கிய பிரமுகர்களுக்கு தனித்தனியாக தனது நன்றிகளை தெரிவித்து இருந்தார்.