உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குற்றம் சாட்டபவர்களின் குடியிருப்புகளை அரசு புல்டோசர் மூலம் இடிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இதனை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்து கட்டிய வீடுகளாக இருந்தாலும் கூட உரிய சட்ட விதிமுறைகளை பின்பற்றி அதனை இடிக்க வேண்டும் என்ற சட்டம் இருக்கும் போது ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டதால் அவரது வீட்டை அரசாங்கம் இடித்து தள்ளுவது அதிகார பகிர்வு மற்றும் கொள்கைகளை மீறுவதாகும் என நீதிபதிகள் தெரிவித்தனர். அரசு தன்னிச்சையாக சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு இத்தகைய செயல்களில் ஈடுபடக் கூடாது எனவும், இது ஜனநாயக அரசாங்கத்தின் அடித்தளம்.

எனவே அரசு ஒருவரை குற்றவாளி என அறிவித்து அவரின் வீட்டை இடிப்பது சட்டத்தின் அடிப்படை கோட்பாட்டை பாதிக்கக்கூடிய செயல் என வன்மையாக கண்டித்துள்ளனர். இப்படி சட்டத்தில் கையில் எடுத்துக் கொண்டு செயல்படும் அதிகாரிகள் தான் குற்றவாளிகள் என்று கூறிய நீதிபதிகள் அரசியல் அமைப்பின் 19-வது சட்ட பிரிவின்படி தங்கும் இடம் என்பது மக்களின் அடிப்படை உரிமை என்று குறிப்பிட்டு கூறியுள்ளனர். ஒரு சராசரி மனிதன் வீடு கட்டுவது என்பது அவருடைய பல வருட கனவு மற்றும் கடின உழைப்பினால் உருவானது, அதனை குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்பதால் அவர்களின் வீடுகளை சட்டத்தை கையில் எடுத்து கொண்டு அரசாங்கம் அகற்றுவது சட்டத்தை மீறும் செயலாகும். மேலும் வீடு அல்லது கட்டிடங்களை அதிகாரிகள் அகற்ற முற்பட்டால் பல்வேறு விதிகளின் அடிப்படையில் முறைப்படி செய்ய வேண்டும். குறைந்தது 15 நாட்களுக்கு முன்பே அறிவிப்பை வெளியிடாமல் எவ்வித கட்டிடங்களையும் இடிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.