அண்மையில் நடந்து முடிந்த 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இந்த ஆஸ்கர் விருதை பெற ஆஆர்ஆர் படக்குழுவினர் தரப்பிலிருந்து ரூ.80 கோடி செலவு செய்யப்பட்டது என ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நான் அப்படி எதுவும் செலவு செய்யவில்லை என விளக்கமளித்து படத்தின் தயாரிப்பாளர் ஒதுங்கிக்கொண்டார்.

சில நாட்களுக்கு முன்னதாக ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா இதற்கு விளக்கமளிக்கும் வகையில் “80 கோடி செலவு செய்யப்பட்டது என கூறுவதில் துளியும் உண்மையில்லை. நடைமுறை செலவுகள், புரமோஷன், போக்குவரத்து என சுமார் 8.5 கோடி வரை செலவு செய்தது மட்டும்தான் உண்மை” என்று புது கணக்கு ஒன்றை கூறினார்.

எனினும் ஆஸ்கர் விருதுக்கு ஆர்ஆர்ஆர் படத்தை அனுப்பிய விவரம் பற்றி நன்கு தெரிந்த திரையுலக வட்டாரத்தினர் ராஜமவுலியின் மகன் சொல்லும் கணக்கு தவறு எனவும்  உண்மையில் 80 கோடி வரை செலவு செய்யப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது எனவும் கூறுகின்றனர். ராஜமவுலியின் மகன் இப்போது கணக்கை குறைத்து சொல்கிறார் என்று தெலுங்கு திரையுலக வட்டாரத்தில் சிலர் கூறி வருகின்றனர்.