ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள திரிபோலியா சந்தையில், கடுமையான வெப்பத்தின்போது ஷாப்பிங் செய்துவரும் ஒரு பெண்ணின் சால்வை திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை மதியம் கண்டோய் சந்தையில் நடந்ததாகவும், அதற்கான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், நான்கு பெண்கள் கைகளில் ஷாப்பிங் பைகளுடன், கடைக்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருக்கும் நிலையில், ஒருவர் சால்வைக்கு பின்னால் தீப்பிடித்து எரிகிறது.

 

தீப்பிடித்ததும், அந்த பெண் அலறிக்கொண்டு சால்வையை உடனடியாக கழற்றி எறிந்தார். பின்னால் வந்த மற்ற பெண்களும் துணியால் தீயை அணைக்க முயன்றனர். அருகிலிருந்த வியாபாரிகளும் விரைந்து வந்து தீயை அணைத்து, அந்தப் பெண்ணுக்கு முதலுதவியளித்தனர். அப்போது அந்தப் பெண்ணின் கையில் லேசான தீக்காயம் ஏற்பட்டது, மேலும் அருகிலிருந்த சில துணிகள் மற்றும் கடை பொருட்களும் எரிந்தன. தற்போது அந்த பெண் சீராக இருக்கிறார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயின் காரணம் தெளிவாக தெரியவில்லை என்றாலும், வெப்ப அலை காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என திரிபோலியா ஜவுளி வர்த்தகர்கள் சங்க தலைவர் தீபக் சோனி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “பிளாஸ்டிக் மற்றும் பருத்தி கலந்த நூல் சால்வை போன்றவை கோடைக்கால வெப்பத்தில் எளிதில் தீப்பிடிக்கும். மக்கள் இவ்வாறான ஆடைகளை தவிர்க்க வேண்டியது அவசியம்,” என்றும் தெரிவித்துள்ளார். வானிலைத் தகவல்படி, மே 25–26 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தற்போது ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.