நாக்பூர் ரயில்வே நிலையத்தில் நடந்த அதிர்ச்சிக்குள்ளான ஒரு சம்பவத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் ஒருவர், திடீரென சமநிலையை இழந்து நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடைப்பட்ட இடைவெளியில் விழவிருந்தார். அச்சமயம், அருகில் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) வீரர் தீரஜ் தலால் துரிதமாக ஓடி வந்து, அந்தப் பெண்ணை எழுப்பி, உயிரைக் காப்பாற்றினார். இந்த சம்பவம் RPF அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில் தெளிவாக காணப்படுகிறது.

 

இந்த சம்பவம் திங்கள்கிழமை மாலை நாக்பூர் – புனே எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்ற போது நடந்தது. ரயில் நிலையத்தின் நான்காம் பிளாட்பாரத்தில் ஓடி வந்த அந்தப் பெண், ரயிலில் ஏற முயன்றபோது, அவரது கால்கள் வழுக்கி கீழே விழுந்தார். ரயில் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருந்த நிலையிலும், வீரர் தீரஜ் தலால் துணிச்சலாக செயல்பட்டு அவர் விழுவதற்கு முன் காப்பாற்றியதால், ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த நிகழ்வு ‘ஆபரேஷன் ஜீவன் ரக்ஷா’ என்ற திட்டத்தின் கீழ் நடைபெற்றது. சமூக வலைதளங்களில் இது வைரலாகி, RPF வீரரின் செயல் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது. “இது போன்ற சம்பவங்கள் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயன்பெறும் ரயில்வே நிலையங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

ஓடும் ரயிலில் ஏறுவதை தவிர்க்க வேண்டும்” என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.