சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் பெரிய மேட்டுப்பாளையம் 1-வது தெருவில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பவானி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பொற்செல்வி (21), விஜயலட்சுமி(16) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் பொற்செல்வி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ஜெயலட்சுமி காலடிப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மூர்த்தி தனது மகள் ஜெயலட்சுமியிடம் படித்தால் தான் வாழ்க்கையில் முன்னேறலாம். எந்த சூழ்நிலையிலும் படிப்பை விடக்கூடாது என அடிக்கடி கூறி வந்துள்ளார். நேற்று முன்தினம் சமூக அறிவியல் கடைசி தேர்வு எழுத ஜெயலட்சுமி தயாராகி வந்துள்ளார். இந்நிலையில் உடல் நல குறைவு காரணமாக மூர்த்தி திடீரென உயிரிழந்தார். இதனால் செய்வதறியாது துக்கத்தில் ஜெயலட்சுமி கதறி அழுதார்.

இதனையடுத்து தந்தையின் கல்வி ஆசையை நிறைவேற்றும் நோக்கத்தோடு சக மாணவிகள் துணையுடன் ஜெயலட்சுமி கடைசி தேர்வை எழுதுவதற்காக பள்ளிக்கு சென்றுள்ளார். அவருக்கு ஆசிரியர்களும், சக மாணவிகளும் ஆறுதல் கூறினார்கள். இதுகுறித்து ஜெயலட்சுமி கூறியதாவது, எனது தந்தை எப்போதும் படிப்பில் கவனம் செலுத்துமாறு கூறுவார். அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் தேர்வு எழுதினேன் என கூறினார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.