மத்திய பிரதேசம் மாநிலம் சத்தர்பூரில் திருமணமான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரது  பக்கத்து வீட்டில் வீரேந்திர யாதவ் என்ற திருமணமான இளைஞர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதை எதிர்த்து வீரேந்திர யாதவ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி விசாரித்த போது, வீரேந்திர யாதவ் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மேற்கோள்காட்டி திருமணமான பெண் பொய்யான வாக்குறுதி அளித்து உடலுறவுக்கு ஒப்புதல் பெறப்பட்டதாக கூற முடியாது என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி புகார் கொடுத்த பெண்ணுடைய வாக்குமூலத்தை ஆராய்ந்தார். அதில் இளைஞனுடன் 3 மாதங்களாக தான் உடலுறவில் இருந்ததாகவும், என் கணவர் இல்லாத போதெல்லாம் இளைஞர் என்னுடைய வீட்டிற்கு வருவார் என்றும் கூறியிருந்தார். தங்கள் உறவில் எந்த ஒரு வற்புறுத்தலோ அல்லது கட்டாயப்படுத்தலோ இல்லை என்று அந்த பெண் கூறியிருந்தார். அந்த இளைஞர் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி உறுதியளித்ததாகவும் பெண் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்தப் பெண் பொய்யான வாக்குறுதியின் பெயரில் பாலியல் உறவு கொள்ள வற்புறுத்தப்பட்டதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை. எனவே நீதிபதி, இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து, அவரை விடுவிக்க உத்தரவிட்டார்.