திருச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கு காட்டூர் சோழன் நகர் இரண்டாவது குறுக்கு தெரு பகுதியை சேர்ந்த தம்பதியினர் கிஷோர் குமார் (32)- ஜனனி (30). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கிஷோர் குமார் காட்டூர் பகுதியில் உள்ள பிரபல எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் சேல்ஸ்மேன் ஆக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் கிஷோர் ஆன்லைனில் ரம்மி விளையாடி பல லட்ச ரூபாயை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ம், பண நெருக்கடிக்கும் ஆளான கிஷோர் குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிய கிஷோர் குமாரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

இச்சம்பவத்தை அடுத்து கிஷோர் குமாரின் மனைவி ஜனனி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.