மலப்புரம் மாவட்டம் உப்பஞ்சேரிம்மாள் பகுதியில் ஒரு குடிசை வீட்டில் பினி என்ற பெண் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மிகவும் கஷ்டப்பட்ட நிலைமையில் வசித்து வரும் இவரின் கணவர் ஷாஜூ கடந்த 2019 ஆம் ஆண்டு டிரைவர் வேலைக்காக சவுதிக்கு சென்றார். அங்கு நவம்பர் 30ஆம் தேதி இவர் இயக்கிய வாகனத்தினால் ஏற்பட்ட சாலை விபத்தின் போது சவுதி நாட்டை சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததால் ஷாஜூவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் ரூ. 75 லட்சம் இழப்பீடு தொகையை செலுத்தினால்தான் விடுதலை வழங்கப்படும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் அவரது பணியாளர் நிறுவனம் ரூ. 35 லட்சம் செலுத்தியது. அதன் பின் 2020 ஆம் ஆண்டு தேதி ஷாஜூவுக்கு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். ஆனால் மீதமுள்ள ரூ. 35 லட்சம் செலுத்தப்படாததால் சவுதியில் சிக்கிக்கொண்டார்.

அதோடு இன்று வரை சம்பளம் இல்லாமல், பாஸ்போர்ட் கிடைக்காமல், சுதந்திரமில்லாத வாழ்க்கையை வாழ்ந்து வரும் நிலையில் பினியும் அவரது மகள்களும் உணவு, அடைக்கலம், கல்வி என எந்தவித ஆதாரமும் இல்லாமல் கண்ணீருடன் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஷாஜுவை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்காக ஊர் பொதுமக்கள் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி அவரது பெயரில் நன்கொடை கணக்கு தொடங்கப்பட்டு கேரளா கிராமீன் வங்கி குன்னமங்கலம் கிளையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செய்தி சமூக ஊடகங்களில் பரவிய நிலையில் பலரும் நன்கொடை அளிக்க முன்வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.