மதுரை மாவட்டத்தில் உள்ள ஒத்தக்கடை அருகே வளையாபதி பகுதியை சேர்ந்தவர் பிரபல யூடியூபர் சுதர்சன். இவர் டெக் சூப்பர் ஸ்டார் என்ற யூடுயூப்  சேனலை நடத்தி வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் டெக் பாஸ் என்ற சேனல் மூலம் பிரபலமானவர். இவருக்கும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்த விமலாதேவி என்ற பெண்ணுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் காதல் ஏற்பட்டுள்ளது.

அடுத்து இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மதுரையில் திருமணம் செய்து கொண்டனர். அந்தத் திருமணத்தில் பெண் வீட்டார் சார்பில் 30 சவரன் தங்க நகை மற்றும் 5 லட்சம் ரூபாய் ரொக்க பணம் மேலும் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி அன்று கர்ப்பிணி பெண்ணான விமலா தேவி தனது கணவர் மேலும் 20 சவரன் தங்க நகைகளை வரதட்சணையாக கேட்டு கொலை மிரட்டல் செய்வதாக புகார் அளித்துள்ளார்.

மேலும் வீடு கட்ட வேண்டும் என்பதற்காக கர்ப்பிணிப் பெண் என்று கூட பார்க்காமல் மனைவியை அடித்து விரட்டியதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

இந்தச் சூழலில் ரூபாய் 5 லட்சம் கொடுப்பதாக விமலா தேவியின் குடும்பத்தினர் தயாராக இருந்த நிலையிலும் சுதர்சன் வீட்டார் ரூபாய் 10 லட்சம் கேட்டு மிரட்டுவதாக கூறப்படுகிறது.

அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சுதர்சன் தாய் மாலதி, தந்தை சுந்தர்ராஜன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதில் சுதர்சன் மட்டும் தலைமுறைவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.