உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டாவில் போக்குவரத்து விதிகளை மீறிய கார் ஓட்டுநர் ஒருவர், தன்னைத் தடுக்க முயன்ற போக்குவரத்து காவலரை காரின் முகப்புப் பகுதியில் சுமார் 500 மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.
Viral Video: A traffic police officer in Greater Noida was dragged on a car’s bonnet near AWHO Township after attempting to stop the vehicle for a violation. pic.twitter.com/wJU0OuLJwj
— Abhijit Pathak (@aajtakabhijit) January 28, 2026
பி-3 என்று அழைக்கப்படும் வட்டச் சந்திப்பு பகுதியில் புதன்கிழமை மதியம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டபோது, அதனைச் சீர் செய்யும் பணியில் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த சிவப்பு நிற ஹூண்டாய் காரை நிறுத்தும்படி காவலர் சைகை காட்டியும், ஓட்டுநர் அதனைப் பொருட்படுத்தாமல் காவலர் மீது காரை மோதியவாறு முன்னோக்கிச் சென்றுள்ளார்.
இதில் காரின் முகப்புப் பகுதியில் தொற்றிக்கொண்ட காவலரை நீண்ட தூரம் இழுத்துச் சென்ற ஓட்டுநர், பின்னர் அவரைச் சாலையில் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த விபத்தில் காயமடைந்த காவலர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துணிகரச் செயலில் ஈடுபட்ட ஓட்டுநரைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
