
மத்தியப் பிரதேசத்த்தில் உள்ள பர்வானி மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது மாணவர் மேக் ஷா, குஜராத்தில் உள்ள தபோவன் பள்ளியில் 9ஆம் வகுப்பு விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். கடந்த மே 24ஆம் தேதி இரவு 1 மணி அளவில் மேக் ஷாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதைக் விடுதி உதவியாளரிடம் கூறியபோதும், அதனை விடுதி உதவியாளர் அமிலத்தன்மை என்று தவறாக நினைத்துள்ளார்.
இதனால் பல மணி நேரம் வலியில் தவித்துள்ளார். அதன்பின் காலை 8 மணிக்குப்பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் வழியிலேயே மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து குடும்பத்தினர் கூறியதாவது, விடுமுறைக்குப் பிறகு சில நாட்களாக மட்டும் தான் மேக் ஷா பள்ளிக்கு திரும்பியிருந்தார். மாணவர்களுக்கு கூடுதல் வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், அவரும் சென்றிருந்தார். அங்கு மாணவர் நெஞ்சு வலியால் வேதனைப்படும் நிலையில், மருத்துவ உதவி தேவைப்படுமென்று அறிவித்தபோதும், முறையான கவனிப்பும் சிகிச்சையும் வழங்கப்படவில்லை.
விடுதி உதவியாளர் ஹர்ஷத் ரத்வா, மாணவருக்கு அமிலத்தன்மைக்கு மருந்து கொடுத்து விட்டதாகவும், மேலாளர் கங்காதர் பாண்டேவ், மாணவனுக்கு மார்பில் களிம்பு தடவியதாகவும் கூறியுள்ளார். ஆனால், எந்தவித மருத்துவ உதவியும் உடனடியாக ஏற்பாடு செய்யப்படவில்லை.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் விடுதி உதவியாளரை இடைநீக்கம் செய்துள்ளது. மாணவரின் மரணம் குறித்து குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். மேலும், கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து நவ்சாரி கிராமப்புற காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றது.