தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தலைவர் ஆர்.கே.செல்வமணி  பத்திரிகையாளர்களை சந்தித்தபோது கூறியுள்ளதாவது, ‘திரைப்படத்துறையில் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து ஆபத்தான மற்றும் சிரமமான நிலைமையே உள்ளது.   3 ஆண்டுகளுக்கு ஒரு முறை திரைப்படம் மற்றும் சின்னத்திரை தயாரிப்பாளர்களிடம் வற்புறுத்தி எங்களது சம்பளத்தை ஓரளவு அதிகரித்து  வரும் சூழல் உள்ளது. அதாவது திரைப்படத் துறையில் சாதாரண தொழிலாளர்களின் சம்பளம் இன்று ரூ. 1000/- தொடுவதற்கு 100 ஆண்டுகள் கடக்க வேண்டியுள்ளதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் திரைப்படத் துறைக்கு செய்யும் உதவிகள் மேலோட்டமான நிலையில் உள்ளது.

மேலும் இதுவரை திரைப்படத்துறையில் பணிபுரியும்போது நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பங்களை காப்பாற்ற போதிய எந்த வழியும் இல்லை. எனவே திரைப்படத்துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நேரடியாக உதவி செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளிடம் வேண்டுகோள் வைக்கிறோம். எங்களுக்கு உதவும் வகையிலான திட்டத்தை வரும் நிதியாண்டு பட்ஜெட்டில் அறிவிக்குமாறு தமிழக முதல்வரை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.